Breaking

Thursday, January 9, 2020

January 09, 2020

மில்கோ பால் உற்பத்தியாளர் சமூக பாதுகாப்பு நிதியத்தின் ஏற்பாட்டில் பயனாளிகளுக்கான நன்மை வழங்கும் நிகழ்வு!


மில்கோ நிறுவனத்தின் செட்டிகுளம் பால் குளிரூட்டும் நிலையத்தில் அங்கத்துவம் வகிக்கும் பால் உற்பத்தியாளர்களுக்கான நன்மைகள் வழங்கும் நிகழ்வு 09.01.2020 (வியாழன்) இன்று காலை 09.30 மணியளவில் செட்டிகுளம் பால் குளிரூட்டும் நிலையத்தில், மில்கோ வெளிக்கள உத்தியோகத்தோர் தலைமையில் நடைபெற்றது.

இதில் வெங்கலச் செட்டிக்குள பிரதேச செயலாளர் திரு.S. சிவகரன், வாரிக்குட்டியூர் கிராம உத்தியோகத்தர் திரு.P.பாலசிறிதரன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. S.வசந்தகுமாரி ஆகியோர் கலந்து கொண்டு அங்கத்தவர்களின் பிள்ளைகளின் தரம் 01ற்கான பாடசாலை பொதிகள்,

அங்கத்தவர்களின் மரணத்திற்கான ரூ.75000.00 பெறுமதியான காசோலைகள், அங்கத்தவர்களின் பிள்ளைகளின் பல்கலைக்கழக படிப்பிற்கான உதவித் தொகை ரூ.25000.00 பெறுமதியான காசோலைகள் மற்றும் ஏனைய நன்மைகளுக்கான கொடுப்பனவுகளும் வழங்கிவைக்கப்பட்டன.

Sunday, December 29, 2019

December 29, 2019

முல்லைத்தீவு நாயாறு கடலில் மூழ்கி தந்தை பலி :மகனை காணவில்லை! தேடுதல் தீவிரம்!


முல்லைத்தீவு நாயாறு பிரதேசத்தில் உள்ள கடலில் மூழ்கி 55 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளா​ர்.

குறித்த நபருடைய 16 வயதான மகனும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீரில் அடித்துச் செல்லப்பட்ட மகனை தேடும் நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

Thursday, December 26, 2019

December 26, 2019

யாழ் சாவகச்சேரி பிரபல வணிக நிலையத்தில் தீ விபத்து! 2 கோடி ரூபா நாசம்!


சாவகச்சேரியில் இலத்திரனியல் உபகரண விற்பனை நிலையம் தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.

இன்று மாலையே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது, ஏ9 வீதி சாவகச்சேரி நகரிலேயே உள்ள இவ்வர்த்தக நிலையத்தில் தீ பரவியுள்ளது, தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதும் அங்கிருந்த சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின.

தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் பொதுமக்களுடன் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரும் இணைந்தனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்புப் படையினர் அங்கு விரைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர்.

அருகில் உள்ள பாதணிகள் விற்பனை நிலையத்துக்கும் தீ பரவியது. எனினும் சுமார் 35 நிமிடங்களில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.


December 26, 2019

யாழில் பரிதாபம்! கணவனை மிரட்ட முற்பட்டு தீயில் எரிந்த பெண் பலி!


கணவனுடன் ஏற்பட்ட சண்டையில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலை செய்யப் போவதாக மிரட்டிய இளம்பெண் தீயில் எரிந்து காயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் அச்சுவேலி தெற்கு சேர்ந்த கசீபன் கீர்த்தனா(வயது 29) என்ற ஒரு பிள்ளையின் தாயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அச்சுவேலி தெற்கில் வசித்துவரும் குறித்த குடும்பத்தில் கணவனுக்கும் மனைவிக்குமிடையில் தொடர்ச்சியாக முரண்பாடுகள் ஏற்பட்டு வந்துள்ளது இந்நிலையில் கடந்த மாதம் 18ம் திகதி கணவனுக்கு முன்பாக மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்யப் போவதாக மிரட்டியுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மனைவியின் உடலில் தீப்பற்றி எரிந்தது தீக்காயத்துக்கு உள்ளான பெண் உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்து பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இந்த உயிரிழப்பு தொடர்பான விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிரேம்குமார் மேற்கொண்டார்.

Thursday, December 19, 2019

December 19, 2019

வடக்கிற்கு புதிய ஆளுநராக திருமதி சார்ள்ஸை நியமிக்க அமைச்சரவை அனுமதி !


வடக்கு மாகாண ஆளுநராக சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியான திருமதி சார்ள்ஸை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று மாலை ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இதன்படி திருமதி சார்ள்ஸ் விரைவில் வடக்கு ஆளுநராக பதவி ஏற்கவுள்ளார்.

இதேவேளை வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மண் அகழ்வு குறித்தும் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.அது குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

Sunday, December 15, 2019

December 15, 2019

நாளை முதல் சீமெந்து விலை குறைகிறது - புதிய விலை என்ன தெரியுமா?

உள்நாட்டில் தயாரிக்கப்படும் சீமெந்து பக்கெட் ஒன்றின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் நலன்புரி இராஜாங்க அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தினால் வற் வரி உள்ளிட்ட வரிகள் குறைக்கப்பட்டதன் விளைவாக, நாளை திங்கட்கிழமை முதல் உள்நாட்டு சீமெந்தின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதன் அடிப்படையில் தற்பொழுது 1,095.00 ரூபாவாக விற்கப்படும் 50 kg உள்நாட்டு சீமெந்து பொதியின் விலை நாளை திங்கட்கிழமை முதல் 995.00 ரூபாவாக குறைவடையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் வற் வரி மற்றும் ஏனைய வரிகள் குறைக்கப்பட்டதாலேயே இவ்வாறு சீமெந்தின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
December 15, 2019

காலணி இல்லாமல் நாடாவை சுற்றிக்கொண்டு ஓடி 3 தங்கம் வென்ற மாணவி!


காலணி வாங்கப் பணமில்லாமல், காலில் நாடாவை சுற்றிக் கொண்டு ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொண்டு, மூன்று தங்கங்களை வென்ற மாணவியை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.

பிலிப்பைன்ஸில் இந்த சம்பவம் நடந்தது.

11 வயதான ரீ புல்லோஸ் எனும் மாணவி, பிலிப்பைன்ஸில் நடந்த பாடசாலைகளிற்கிடையிலான விளையாட்டு நிகழ்வில் மூன்று தங்கங்களை வென்றார். அந்த நாட்டின் பின்தங்கிய பகுதியிலிருந்து வந்த அந்த மணவிக்கு மட்டுமல்ல, அவரது குழுவிலிருந்து 12 பேரில், இருவருக்கு மட்டுமே காலணி இருந்தது.

ரீ புல்லோஸ் மட்டுமல்ல, காலணி இல்லாத ஏனைய மாணவிகளும், காலில் நாடா சுற்றிக் கொண்டுதான் ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொண்டனர்.

கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு முன்புதான் புல்லோஸ் தன்னுடைய ஓட்டத் திறனை வெளிப்படுத்தினார் என்று அவரது பயிற்சியாளர் பிரிடிரிக் வெலென்ஸுவேலா கூறினார்.

“நாடாவைக் காலில் சுற்றிக்கொண்டு ஓடி மூன்று போட்டிகளில் வெல்வது மிகவும் சிரமமான செயல். ஆனால் அதனைச் செய்து முடித்துள்ளார் புல்லோஸ்,” என்று பெருமிதம் பொங்கக் கூறினார் அவர்.

December 15, 2019

இன்றைய ராசிபலன் 15.12.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!


இன்று!
விகாரி வருடம், கார்த்திகை மாதம் 29ம் தேதி, ரபியுல் ஆகிர் 17ம் தேதி,
15.12.19 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை, திரிதியை திதி காலை 8:51 வரை,
அதன் பின் சதுர்த்தி திதி, புனர்பூசம் நட்சத்திரம் காலை 6:47 மணி வரை,
அதன் பின் பூசம் நட்சத்திரம் நாளை அதிகாலை 5:27 மணி வரை, சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30 - 9:00 மணி
ராகு காலம் : மாலை 4:30 - 6:00 மணி
எமகண்டம் : பகல் 12:00 - 1:30 மணி
குளிகை : பகல் 3:00 - 4:30 மணி
சூலம் : மேற்கு

தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.

இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷம்

மேஷம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும் பழைய கடனைத் தீர்க்கமுயற்சி செய்வீர்கள். வீடு வாகனப்பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். பயணங்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள் உடன் பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள் அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள் அரசால் ஆதாயம் உண்டு வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள் உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள் வெற்றிபெறும் நாள்.

மிதுனம்

மிதுனம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகி மகிழ்ச்சி பொங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும் புதியவர்களின் நட்பு கிடைக்கும் நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள் வியாபாரத்தில் போட்டிகள் குறையும் உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும் உற்சாகமான நாள்

கடகம்

கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும் குடும்பத்தாருடன் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது மற்றவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள் உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து செல்வது நல்லது இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

சிம்மம்

சிம்மம்: எடுத்த காரியங்கள் அனைத்திலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். சில விஷயங்களை முடிக்க அதிகம் போராட வேண்டியிருக்கும். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.

கன்னி

கன்னி: உங்களை சுற்றி இருக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு பெருகும் பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள் நல்லவை நடக்கும் நாள்.

துலாம்

துலாம்: உங்கள் எண்ணங்களை செயலாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கிதுடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதிகிடைக்கும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதுதொடர்பு ஏற்படும். உத்தியோகத்தில் அமைதியான சூழல் உருவாகும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

தனுசு

தனுசு: சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும். உங்களைப் பற்றிய ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். சாலைகளை கவனமாக கடந்துச்செல்லுங்கள். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் மந்தநிலை உருவாகும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்

மகரம்

மகரம்: கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள் உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். நன்மை கிட்டும் நாள்.

கும்பம்

கும்பம்: பணப்புழக்கம் அதிகரிக்கும் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். அரசால் ஆதாயமுண்டு. வழக்கில் தீர்ப்பு சாதகமாகவரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் கிட்டும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமைதியான நாள்.

மீனம்

மீனம்: வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும் பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். சிறப்புகளை புரிந்துகொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.

Friday, December 13, 2019

December 13, 2019

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட கிளையின் ஈராண்டு பொதுக்கூட்டம்!


இலங்கை செஞ்சிலுவை சங்க முல்லைத்தீவு மாவட்ட கிளையின் ஈராண்டு பொதுக்கூட்டம் 2019.12.11 புதன்கிழமை காலை 10 மணிக்கு தலைவர் திரு.சு.மரியநாயகம் தலைமையில் மாவட்டக்கிளை மாநாட்டு மண்டபத்தில் தேசியக்கொடி மற்றும் செஞ்சிலுவை கொடியேற்றலுடன் ஆரம்பமானது.

இவ் நிகழ்வில் திரு.எம்.யேசு ரெஜினோல்ட், பிரதமகணக்காளர் மாவட்ட செயலகம் முல்லைத்தீவு, திரு .என். இரவீந்திரகுமார், விரிவுரையாளர் பிரிஸ்பேன் பல்கலைக்கழகம் அவுஸ்ரேலியா ஆகியோர் பிரதம விருந்தினராக கலந்துகொண்டனர். மேலும் இவ் பொதுக்கூட்டத்திற்கு செஞ்சிலுவைச்சங்க உறுப்பினர்கள், தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இப் பொதுக்கூட்டத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தால் 2017 – 2018 ஈராண்டு காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான செயற்பாடுகள் தொடர்பாகவும் மற்றும் அதன் கணக்கீட்டு அறிக்கை தொடர்பாகவும் மேலும் எதிர்காலத்தில் மாவட்டத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்மொழிவுகள் தொடர்பாகவும் ஆளுனர் சபையால் உறுப்பினர்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது.

இப் பொதுக்கூட்டம் செயலாளர் திரு.எஸ்.சிவராஜா அவர்களின் நன்றியுரையுடன் பிற்பகல் 12.30 மணியளவில் நிறைவுபெற்றது.


Tuesday, December 10, 2019

December 10, 2019

முல்லைத்தீவில் துப்பாக்கிச் சூடு! இளைஞர் படுகாயம்!


முல்லைத்தீவு – மல்லாவியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 4 மணியளவில் இத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இதுவரை அடையாளங்காணப்படவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது காயமடைந்த 25 வயதான இளைஞர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Monday, December 9, 2019

December 09, 2019

இரண்டரை மாத குழந்தை கிணற்றிற்குள் வீசி கொலை: யாழில் கொடூரம்!


இரண்டரை மாத பாலகன் நள்ளிரவு கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் துன்னாலையில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் துன்னாலை குடவத்தைப் பகுதியில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தையார் இரவு கடமைக்காக சென்றிருந்த நிலையில் தாயாருடன் பாலகன் உறங்கியுள்ளான்.

இந்த நிலையில் பாலகனை நேற்றிரவு 11.30 மணி முதல் காணவில்லை என்று தாயார் பொலிஸில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இன்று காலை கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பாலகனின் சடலம் மந்திகை மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உடற்கூற்று விசாரணையின் பின்னரே உண்மை துலங்கும் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நெல்லியடிப் பொலிஸார், தந்தையையும் தாயாரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்துள்ளனர்.