Breaking

Saturday, May 25, 2019

ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபர்களின் வங்கி கணக்குகளில் இருந்த பணம் எவ்வளவு தெரியுமா? விபரம் வெளியானது!

ஈஸ்டர் தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் 41 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் ஊடக மத்திய நிலையத்தில் நேற்று (24-5-19) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் பொறுப்பில் உள்ள சில சந்தேகநபர்களின் வங்கிக் கணக்குகளே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.

குறித்த வங்கிக் கணக்குகளில் 134 மில்லியன் ரூபா பணம் வைப்பிலிருப்பதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. தவிர, பதினநான்கு மில்லியன் ரூபா பணம் தற்பொழுது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், ஏழு பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் தொடர்பிலும் தற்பொழுது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக” அவர் மேலும் தெரிவித்தார்.