Breaking

Saturday, May 25, 2019

கைதான தௌஹீத் ஜமாத் அமைப்பாளர் வீட்டில் கடும் சோதனை : கிணற்றுக்குள் சிக்கிய மர்ம பொருட்கள்!

தேசிய தௌஹீத் ஜமாத் (NTJ )அமைப்பின் அம்பாறை மாவட்ட அமைப்பாளராக கருதப்படும் சியாம் என்பவர் தங்கி இருந்த வீட்டில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று இரவு (24-5-19) முன்னெடுக்கப்பட்ட இந்த தேடுதலில் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் தடயவியல் காவற்துறை இணைந்து ஈடுபட்டனர்.

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் சியாம், கடந்த திங்கட்கிழமை கல்முனையில் வைத்து கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரிடம் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் குறித்து கடும் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அவர் தங்கியிருந்த வீட்டில் தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.

கல்முனை நகர மண்டபம் வீதியில் உள்ள குறித்த வீட்டில் அமைந்துள்ள கிணறு இறைக்கப்பட்டு மேற்கொண்ட தேடுதலில் பல சந்தேகத்திற்கிடமான பொருட்கள் கைப்பற்றப்பட்டு காவற்துறையினரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைதான சந்தேகநபர் வழங்கிய தகவலுக்கு அமைய நால்வர் அன்றைய தினமே பல்வேறு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இவர்கள் சாய்ந்தமருது, சம்மாந்துறை போன்ற பிரதேசங்களில் தற்கொலைதாரிகள் தங்குவதற்கான வீடுகளை வாடகைக்கு எடுத்துக்கொடுத்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.