Breaking

Tuesday, May 21, 2019

அரசாங்கத்திற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை கருவின் கையில்!

பிரதமர் ரணில் மற்றும் அமைச்சரவை உள்ளிட்ட அரசாங்கத்திற்கு எதிரான ஜேவிபியின் அவநம்பிக்கை பிரேரணை இன்றைய தினம் (21-05-2019) சபாநாயகர் கருஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜேவிபியின் (JVP) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்கவினால் குறித்த பிரேரணை நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிரான பிரதான 6 குற்றச்சாட்டுக்கள் அந்த பிரேரணையில் உள்ளடங்கியுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் எமது செய்தி பிரிவிடம் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இது குறித்த விபரங்களை அரசாங்கம் அறிந்தும், அறியாதது போல தற்போதைய அரசாங்கம் செயற்பட்டுள்ளது.

முன்கூட்டியே பயங்கரவாத தாக்குதல்கள் குறித்த விபரங்களை அறிந்திருந்தாலும், அதனை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.

அத்துடன் நாட்டில் இடம்பெறுகின்ற அடிப்படைவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்தவும் அரசாங்கத்தினால் இயலாதுள்ளது.

இந்த நிலையிலேயே அரசாங்கத்துக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 24ம் திகதி, தற்போதைய அரசாங்கம் திடீரென மாற்றப்பட்டு ஆட்சிக் கவிழ்ப்பு இடம்பெற்ற போது, ரணில் தலைமையிலான அரசாங்கத்துக்கு ஜேவிபி மறைமுக ஆதரவை வெளிப்படுத்தி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.