Breaking

Friday, June 28, 2019

மாமியாரை கொன்று விட்டு நாடகமாடிய மருமகள்! இலங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!


இலங்கையில் மாமியாரை கொலை செய்த மருமகள் மற்றும் இதற்கு ஆதரவாக இருந்த ஆணொருவர் ஆகிய இருவரையும் எதிர்வரும் ஏழாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு கம்பளை மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாமியாரின் மரணத்தில் நிலவிய சந்தேகத்தையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது மருமகள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை கைது செய்து பொலிஸார் தீவிர விசாரணையை முன்னெடுத்திருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் குறித்த கொலையை தானே செய்ததாக சந்தேகநபர் ஒப்புக்கொண்டுள்ளார். காவல் துறை மேற்கொண்ட விசாரணையில் மேலும்,

சந்தேகநபரான பெண்ணின் கணவர் கொழும்பில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கணவரின் தாயான (மாமியார்), மருமகளான அந்த பெண் அவரின் 3 பிள்ளைகள் ஒன்றாக பெல்லப்பிட்டிய - ஹெடம்ப கஸ்ஹின்ன பிரதேசத்தில் வசித்து வந்துள்ளனர்.

தினமும் தனது பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து செல்லும் வான் சாரதியுடன், மருமகளான 23 வயதுடைய பெண்ணுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 21ஆம் திகதி வான் சாரதி மற்றும மருமகள் வீட்டின் அறையில் இருப்பதை மாமி கண்டுள்ளார். இதன்போது மருமகள், மாமியின் வாய் மற்றும் மூக்கு பகுதியை அடைத்து மூச்சு திணறலை ஏற்படுத்தி கொலை செய்துள்ளார்.

அதன் பின்னர் வான் சாரதியுடன் இணைந்து மாமியின் சடலத்தை சமையலறை பக்கமாக தூக்கி சென்று கயிறு ஒன்றில் தூக்கிட்டு தொங்கவிட்டுள்ளார்.

மறுநாள் 22ஆம் திகதி பொலிஸ் அவசர சேவைப் பிரிவுக்கு அழைப்பை மேற்கொண்டு தனது மாமி சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர் என தெரியவருகிறது.

ரஜஎல ஹெடம்ப கஸ்ஹின்னயை சேர்ந்த 72 வயதான எட்லிங் பெர்ணாந்து என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.