Breaking

Wednesday, June 12, 2019

பயங்கரவாதி சஹ்ரானுடன் இணைந்து செயற்பட்ட கோத்தபாய, ஹிஸ்புல்லா! வெளியான பரபரப்பு தகவல்

பயங்கரவாத அமைப்பான தேசிய தொஹித் ஜமாத் (NTJ) அமைப்புடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவுக்கு நெருக்கிய தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று (11-6-19) ஆஜராக சாட்சியம் வழங்கிய முன்னாள் ஆளுநர் அசாத் சாலி இந்தத் தகவலை வெளியிட்டார். இதன்போது பல அதிர்ச்சிகர தகவல்களை அசாத் சாலி அம்பலப்படுத்தினார்.

காத்தான்குடி பயங்கரவாதி சஹ்ரானின் கோட்டையாக இருந்தது. சஹ்ரானுடன் ஹிஸ்புல்லா, கோத்தபாய மிகவும் நெருக்கமான உறவினை வைத்திருந்தனர்.

கடந்த பொதுத் தேர்தலில் ஹிஸ்புல்லாவுக்கும் சஹ்ரானுக்கும் இடையில் தொடர்புகள் காணப்பட்டன. அவர் தேர்தலுக்கு உதவினார். இதற்குக் காரணமும் காத்தான்குடியில் சஹ்ரானின் பலமே . சில உடன்படிக்கைகளை செய்துகொண்டு தேர்தலுக்காக சஹ்ரான் ஹிஸ்புல்லாஹ்விற்கு உதவினார்,

அப்துல் ராசிக் என்ற நபர் இன்னமும் வெளியில் சுதந்திரமாக உள்ளார். இவர் காவற்துறையினரின் பாதுகாப்பில் தான் உள்ளார். கொழும்பில் தான் வாழ்கின்றார். இவர் ISIS அமைப்பின் தலைவர் பாக்தாதியின் கருத்துக்களை நியாயப்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றார். இவர் நேரடியாக பயங்கரவாத தாக்குதலில் ஈடுபடாவிட்டாலும் கூட பயங்கரவாதி ஒருவரை ஆதரிப்பதும் பயங்கரவாதம் தான். இவர் வெளியில் இருக்கும் வரையில் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது.

உண்மையில் இவர்கள் குறித்து நான் பல தடவைகைகள் அரச தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளேன். தாக்குதல் நடத்த ஒரு வாரத்திற்கு முன்னரும் நான் ஏனைய எமது சமூகத்தினர், சிவில் அமைபினரை அழைத்துக் கொண்டு பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து உரிய காரணிகளை தெரிவித்தேன். எவரும் கருத்தில் கொள்ளவில்லை.

காவற்துறைமா அதிபருக்கும் ஜனாதிபதிக்கும் கூட நான் கிழக்கில் ஒரு நிகழ்வில் வைத்து தெரிவித்தேன். ஆனால் குற்றவாளிகள் என எம்மை கருதினரே தவிர உண்மையான குற்றவாளிகளை கண்டறிய எந்த முயற்சியும் முன்னெடுக்கப்படவில்லை.

இந்த சப்மவம் இடம்பெற கடந்த 1995ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை உள்ள அரசாங்கம் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும். இந்த அடிப்படைவாதம் என்பது கடந்த 2000ஆம் ஆண்டில் இருந்து தெரிவித்துள்ளேன். அப்போதில் இருந்து 5 பாதுகாப்பு செயலாளர்கள் இருந்தனர்.

அவர்களுக்கு நான் உரிய காரணிகளை வழங்கினேன். எவரும் கருத்தில் கொள்ளவில்லை. காவற்துறையில் பல முறைப்பாடுகளை நாம் செய்தோம். முன்னைய ஆட்சியாளர்கள் காலத்தில் காத்தான்குடியில் ISIS அமைப்பு பலமாக செயற்படுகின்றது என நான் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் தெரிவித்தேன். ஆனால் கோத்தபாயவுக்கும் தேசிய தொஹித் ஜமாத் (NTJ) அமைப்புக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது.

நான் தவ்ஹித் ஜமாத் குறித்து பேசிய காரணத்தினால் தான் கைது செய்யப்பட்டேன். அதுமட்டும் அல்ல, இவர்கள் குறித்து வாய் திறக்க வேண்டாம் என எனக்கு அறிவுறுத்தினர். ஐந்நூறு மில்லியன் ரூபாய்கள் பணமாக தருவதாக பேரம்பேசினர். தேர்தலில் களமிறங்குவதாக இருந்தாலும் இதில் இருநூறு மில்லியனை செலவழித்துக்கொள்ளவும் ஆலோசனை வழங்கினர்.

கடந்த காலங்களில் இருந்து காத்தான்குடியில் பல அசம்பாவிதங்கள் இடம்பெற்றது. அவை அனைத்திற்கும் சஹ்ரான் காரணமாக இருந்தார், இது குறித்து எமது முஸ்லிம் மக்கள் பல முறைப்பாடுகளை செய்தும் காவற்துறை சஹ்ரான் பக்கமே நின்றனர். சஹ்ரானை கைது செய்ய மக்கள் கிழக்கில் பாரிய ஆர்ப்பாட்டம் செய்தனர். இவை எல்லாம் இரகசியமான விடயங்கள் அல்ல. அனைவருக்கும் இது நன்றாகவே தெரியும்.

அதேபோல் தேசிய தவ்ஹித் ஜமாத் (NTJ) அமைப்பை தடை செய்ய வேண்டும் என கூறினோம். ஆனால் தேசிய தவ்ஹித் ஜமாத் (NTJ) அமைப்பும் காவற்துறையினருமத் ஒன்றாகவே செயற்பட்டனர். இதுதான் உண்மை என அசாத் சாலி தனது வாக்குமூலத்தில் பதிவு செய்துள்ளார்.