அவுஸ்திரேலிய மருத்துவமனையில் இருந்து  வலுக்கட்டாயமாக அகற்றப்பட்ட இலங்கை அகதி!

அவுஸ்திரேலிய மருத்துவமனையில் இருந்து அகற்றப்பட்ட இலங்கை பெண்!

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படுவதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதியான  பிரியா நடேசலிங்கம் வைத்தியசாலை ஒன்றில் இருந்து வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா சென்ற இலங்கை அகதியான பிரியா கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வயிற்றுவலியினால் பேர்த் நகரில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் சிகிச்சைகளுக்கு பின்னர் அவர் இரண்டு நாட்கள் விருந்தகம் ஒன்றில் தங்கியிருக்க வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

எனினும் அவர் எல்லைப் படை காவலர்களால் மருத்துவமனையில் இருந்து வலுக்கட்டாயமாக கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்து செல்லப்பட்டதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரியாவும் அவரது கணவர் நடேசலிங்கம் மற்றும் இரண்டு மகள்மார் ஆகியோர் அவுஸ்திரேலியாவின் வரி செலுத்துவோரின் 10 மில்லியன் டொலர்களை இதுவரை வீணடித்துள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்தநிலையில் கிறிஸ்மஸ் தீவில் அவர், அவரது கணவர் மற்றும் அவரது இரண்டு இளம் மகள்களுடன் ஒரு நாளைக்கு 20,000 டொலர் செலவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

பிரியாவுக்கு வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில் கிறிஸ்மஸ் தீவில் சிடி ஸ்கேன் மேற்கொள்ள முடியாத நிலையில் அவர் அவுஸ்திரேலியாவின் பிரதான நிலப்பகுதியான பேர்த்தில் உள்ள வைத்தியசாலைக்கு ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்தநிலையில் சிகிக்சைகளுக்கு பின்னர் இரண்டு நாட்கள் விருந்தகம் ஒன்றில் தங்கியிருந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்திருந்தனர்.

எனினும் இன்று புதன்கிழமை முற்பகல் மணியளவில் பிரியா கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பப்பட்டதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரின் சட்டத்தரணியுடன் பிரியா, எல்லைக்காவலர்களால் வலுக்கட்டாயமாக விமான நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டபோது தம்முடன் தொடர்புகொண்டதாக அவுஸ்திரேலிய தமிழ் அகதிகள் சபையின் பேச்சாளர் ஆரன் மயில்வாகனம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

உள்துறை திணைக்கள செய்தித் தொடர்பாளர் ஒருவர் மருத்துவமனையில் இருந்து பிரியா விடுவிக்கப்பட்டமையை உறுதிப்படுத்தியுள்ளார்,

2018 ஆம் ஆண்டு முதல் இந்த குடும்பத்தினர் கிறிஸ்துமஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.