கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த  இலங்கை இராணுவ மேஜர் ஜெனரல்கள்!

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த  இலங்கை இராணுவ மேஜர் ஜெனரல்கள்!

இலங்கை இராணுவத்தின் மேஜர் ஜெனரல் பதவியிலிருக்கும் இரட்டையர்களான மேஜர் ஜெனரல் பூரக செனவிரத்ன மற்றும் மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன ஆகியோர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று இராணுவ தலைமையகத்தில் நடைபெற்றது.

இரட்டைச் சகோதரர்களான இலங்கை சமிக்ஞை படையணியை சேர்ந்த மேஜர் ஜெனரல் பூரக செனவிரத்ன பாதுகாப்பு தலைமை பிரதானி அலுவலகத்தில் பதவிநிலை பிரதானியாகவும், மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன சிங்கப் படையணியின் படைத் தளபதியும், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையத்தின் படைத் தளபதியாக தற்போது பதவி வகிக்கின்றார்கள்.

இவர்கள் இருவரும் ஒரே நாளில் பிறந்து, ஒரே நாளில் பாடசாலைக்கு உட்பகுத்தப்பட்டு உயர்தரம் வரை ஒன்றாக படித்து இருவரும் பாடசாலையில் மாணவ தலைவராக இருந்து விளையாட்டு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு பின்னர் இலங்கை இராணுவத்தில் கெடெற் அதிகாரியாக இருவரும் இணைந்துள்ளனர்.

மேலும் குவேட்டாவில் வெளிநாட்டு பயிற்சியை ஒன்றாக மேற்கொண்டு இராணுவத்தில் அனைத்து பதவி உயர்வுகளையும் ஒன்றாக பெற்று இருவரும் ஒரே தினத்தில் இராணுவத்திலிருந்து ஓய்வு பெறவுள்ளனர்.

இராணுவ தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற இந்த நிகழ்வின் முதல் அங்கமாக கையொப்பமிடும் நிகழ்வுகள் இடம்பெற்றது.

கின்னஸ் புத்தகத்திற்கு உட்புகுத்துவதற்கு தகுதி பெற்ற இந்த இராணுவ உயரதிகாரிகளது வீடியோ காட்சிகள் பார்வையாளர்களுக்காக இந்த நிகழ்வினூடாக முன் வைக்கப்பட்டு பின் இரட்டையர்களது முறையான ஆவணங்களில் கையொப்பமிடப்பட்டது.

பின்னர் இராணுவத் தளபதி அவர்களினால் இந்த இரட்டை அதிகாரிகளது அனைத்து இராணுவ வாழ்க்கை ஆவணங்களும் கின்னஸ் உலக சாதனை பிரதிநிதிக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.