கல்முனை ஆதார வைத்தியசாலையில் குழந்தை பேறுக்காக அனுமதிக்கப்பட்ட தாய் உயிரிழப்பு..!வைத்தியசாலை முன் ஏற்பட்ட குழப்ப நிலை!!

குழந்தை பேறுக்காக அனுமதிக்கப்பட்ட தாய் ஒருவர் உயிரிழப்பு..!

குழந்தை பேறுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் உடநலக்குறைவால்  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை அடுத்து குறித்த பெண்ணின் உறவினர்களால் கல்முனை ஆதார வைத்தியசாலை முன்பாக அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

வைத்தியர் கவனம்மின்றி செயற்பட்டதாகவும் நீதியைப் பெற்றுத்தரக் கோரியும் குறித்த வைத்தியசாலைக்கு முன்னால் இன்று (சனிக்கிழமை) மதியம் ஒன்றுகூடிய உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது.

நேற்று வெல்லாவெளி பாக்கியல்ல சின்னவத்தை பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான மாசிலாமணி சிவராணி என்பவர் குழந்தை பேறுக்காக கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனை அடுத்து குறித்த பெண்ணிற்கு குழந்தைப் பேறுக்காக சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தொடர்ந்து குழந்தையை பிரசவித்த தாய்க்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதன் பின்னர் மீண்டும் அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த சிகிச்சை காரணமாகவே தாய் இறந்ததாகவும் உறவினர் ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வைத்தியசாலையின் முன்னால் அமைதியின்மையை ஏற்படுத்திய சந்தேகத்தின்பேரில் ஐவர் கல்முனை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் உயிரிழந்த தாய்க்கு 3 பிள்ளைகள் இருக்கின்றமை  குறிப்பிடத்தக்கது.