இலங்கையில் முதன் முறையாக கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் குழந்தை பிரசவித்த பெண்..!

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் குழந்தை பிரசவித்த பெண்..!

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த பெண் ஒருவர் வெற்றிகரமாக குழந்தை பிரசவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள வைத்தியசாலை ஒன்றிலேயே இந்த குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பிரசவிக்கும் சத்திர சிகிச்சைக்காக 35 வைத்தியர்கள் இணைந்திருந்ததாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டுபாயில் இருந்து கடந்த மாதம் 10ஆம் திகதி இலங்கை வந்த இந்த கர்ப்பிணி பெண் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். கடந்த 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்றியமை உறுப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் பின்னர் வைத்தியர்களினால் இந்த கர்ப்பிணி பெண்ணை கொழும்பில் உள்ள வைத்தியசாலையின் விசேட பிரிவில் அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த பெண் கடந்த 23ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண்ணுக்கு நேற்றுமுன்தினம் குழந்தை பிரசவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளாக இந்த பெண்ணுக்கு குழந்தை பிரசவிப்பதென்பது சாதாரண விடயமல்ல என்பதனால் சுற்று சூழலுக்குள் வைரஸ் பரவுவதனை குறைப்பதற்காக விசேட முறையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு 35 வைத்தியர்கள் இணைந்திருந்தனர். இந்த சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்ட தாய் மற்றும் சிசு தற்போது ஆரோக்கியமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குழந்தைக்கு கொரோனா தொற்றியுள்ளதா என்பதனை பரிசோதிப்பதற்காக குழந்தையின் மாதிரிகள் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.