மட்டக்களப்பு-கறடியனாறு பகுதியில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு..!

மட்டக்களப்பு-கறடியனாறு பகுதியில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு..!

மட்டக்களப்பில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் கறடியனாறு காட்டுப்பகுதிக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

“உன் பாசத்தை இழந்து தனித்திருக்க நான் விரும்பவில்லை நானும் உன்னோடு வருவேனம்மா” என்று கூறி கதறிய 28 வயது இளைஞனின் சடலம் காட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டியுள்ள கரடியனாறு பொலிஸ் பிரிவின் மரப்பாலம் பிரதேசம் அடர்ந்த மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியில் நேற்று(சனிக்கிழமை) கண்டுக்கப்பட்ட சடலம் வடிச்சல் வீதி கித்துள் கிராமத்தைச் சேர்ந்த செல்வராசா ரவீந்திரன் என்பவருடையது என உறவினர்கள் அடையாளப்படுத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, ‘கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இந்த இளைஞனின் தாய் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்துள்ளார்

தாயின் பிரிவினை தாங்கிக்கொள்ள முடியாமல்  துவண்டு போயிருந்த இளைஞன் கடந்த 21ஆம் திகதி தாயின் இறுதிக் கிரிகைகளை நிறைவேற்றிய சந்தர்ப்பத்தில் “உன் பாசத்தை இழந்து தனித்திருக்க நான் விரும்பவில்லை. நானும் உன் பின்னால் வருவேனம்மா”எனக் கூறி கதறி அழுதுள்ளார்.

தாயின் இறுதிக் கிரியைகளை முடித்த பின்னர் இளைஞன் அதன் பின்னர் வீட்டிலிருந்து மோட்டார் சைக்களில் வெளியே சென்றுள்ளார்.

எங்காவது தொழிலுக்குச் சென்றிருப்பார், தொழில் செய்து முடிந்து வந்து சேர்வார் என உறவினர்கள் நினைத்துக்கொண்டிருந்த நிலையிலேயே நேற்றைய தின அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை கித்துள் காட்டுப் பகுதிக்குச் சென்ற உறவினர்களில் ஒருவர் இந்த இளைஞனின் மோட்டார் சைக்கிள் காட்டிற்குள் கிடப்பதை கண்டு அதனருகே சென்றபோது அவ்விடத்தில் இளைஞனின் சடலமும் அவ்விளைஞனுடைய  செருப்பு, தலைக்கவசம் என்பனவும் காணப்பட்டுள்ளன.

உடனடியாக இவ்விடயம் தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை உடற்கூறாய்வப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.