இலங்கையில் கடற் பிராந்தியங்களை அண்டியுள்ள மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!

கடற் பிராந்தியங்களை அண்டியுள்ள மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டில் தற்போது உள்ள காலநிலையின் அடிப்படையில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் மக்களுக்கு அவதான எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் வடமேல் மாகாணத்தில் பல முறைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாணத்திலும் பொலன்னறுவை, மன்னார், திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன் பேருவளையிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்தை அண்டிய பகுதிகளில் உயர் அலைகள் காரணமாக கடல் அலைகள் கரையை அண்டிய நிலப்பகுதிகளுக்கு வரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, கடற்பிராந்தியங்களை அண்டியுள்ள பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.