அங்கொட லொக்காவின் மரணம் குறித்து வெளியான தகவல்..!!விசாரணைகளில் கோட்டை விட்ட பொலிஸார்..!

அங்கொட லொக்காவின் மரணம் குறித்து வெளியான தகவல்..!!

இலங்கை தாதா, தமிழகத்தில் மர்மமாக உயிரிழந்த சம்பவத்தில், பொலிசார் முறையான விசாரணை நடத்தவில்லை என்று குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையில் போதைப் பொருள் கடத்தும், நிழல் உலக கும்பலைச் சேர்ந்தவர், அங்கொட லொக்கா(36). கடந்த, 2017-ஆம் ஆண்டு, மற்றொரு கடத்தல் கும்பலைச் சேர்ந்த, ஏழு பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த இவர், இலங்கையிலிருந்து தப்பி தமிழகத்தின் சென்னையில் வசித்துள்ளார்.

இதையடுத்து, இவரை இரு வேறு வழக்குகளில், சென்னை பொலிசார் கைது செய்தனர்.

அதன் பின் ஜாமீனில் வெளியே வந்த இவர், பெங்களூரில், ஜூலை 3-ஆம் திகதி காதலியால் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து, பொலிசார் தரப்பில் கூறுகையில், பொலிசார் தன்னை நெருங்குவதை அறிந்த அங்கொட லொக்கா, 2018-ல் கோயமுத்தூருக்கு சென்றார்.

சேரன் மாநகரில், இவருடன், இலங்கையைச் சேர்ந்த அம்மானி தான்ஜி, 27, என்ற பெண்ணும் தங்கினார்.அம்மானி தான்ஜியின் கணவரை ஏற்கனவே கொலை செய்த, அங்கொட லொக்கா, அவருடன் வாழ்ந்து வந்தார்

முன்னதாக, அங்கொட லொக்காவுக்கு, மதுரை வக்கீல் சிவகாமி சுந்தரி, 36, தன் வீட்டில் மூன்று மாதம் அடைக்கலம் கொடுத்துள்ளார்.

சிவகாமி சுந்தரியின் நண்பர், திருப்பூரைச் சேர்ந்த தியானேஸ்வரன், 32, அங்கொட லொக்கா மற்றும் அம்மானி தான்ஜிக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார்.

அங்கொட லொக்கா, தன் குடியுரிமையை மறைத்து பிரதீப்சிங் என்ற பெயரில், திருப்பூர் முகவரியில் போலி ஆதார் அடையாள அட்டை எடுக்க இவர் உதவியுள்ளார்.

இதையடுத்து, அங்கொட லொக்கா, கோயமுத்தூரில் பிரதீப்சிங்காக உலா வந்தார்.ஜூலை, 4-ஆம் திகதி அங்கொட லொக்கா மர்மமான முறையில் இறந்தார்.

அம்மானி தான்ஜி, சிவகாமி சுந்தரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பின் கோயமுத்தூர் சென்ற சிவகாமி சுந்தரி, உயிரிழந்தவர் தன் பெரியப்பா மகன் என, பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். பொலிசாரும், அவர் வழங்கிய, போலி ஆதார் அட்டையை வைத்து வழக்கு பதிவு செய்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பின், சடலத்தை மதுரைக்கு எடுத்துச் சென்று எரித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

தற்போது, இவ்வழக்கில், அம்மானி தான்ஜி, சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஆகிய மூவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில், வக்கீல் சிவகாமி சுந்தரி தெரிவித்த தகவல்களை, முறையாக விசாரிக்காமல், பொலிசார் அலட்சியமாக செயல்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

மேலும், அங்கொட லொக்காவை கொலை செய்ய, அவரது எதிராளிகள் பலர் திட்டமிட்டனர். எதிராளிகளில் சிலர் சிறையிலும், வெளிநாடுகளிலும் தங்கியிருந்தனர்.

அவர்கள், பெண் ஒருவர் மூலம் அங்கொடா லொக்காவை விஷம் கொடுத்து கொலை செய்ததாக, செய்தி வெளியானது. ஆனால், அவர் கோயமுத்தூரில் மாரடைப்பால் உயிரிழந்ததாக, தற்போது தெரிவிக்கப்படுகிறது.

அங்கொட லொக்கா மரணத்தில் பல்வேறு மர்மங்கள் நிறைந்துள்ளன. இதையடுத்து, பொலிசார் பிரேத பரிசோதனையின் ஒரு பகுதியான ரசாயன சோதனை அறிக்கைக்காக காத்திருக்கின்றனர்.

சி.பி.சி.ஐ.டி. சர்வதேச அளவில், இவ்வழக்கு செல்வதால் வழக்கை, சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி, டி.ஜி.பி., திரிபாதி நேற்று மாலை உத்தரவிட்டார்.

சி.பி.சி.ஐ.டி., – ஐ.ஜி., சங்கர் மற்றும் அதிகாரிகள், வழக்கு குறித்த தகவல்களை கோயமுத்தூர் மாநகர பொலிசாரிடமிருந்து பெற்றுக் கொண்டனர். அங்கொட லொக்கா மரணம் குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட அம்மானி தான்ஜி, சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் மூவரையும் சிறையில் அடைப்பதற்காக, நீதிமன்றத்துக்கு பொலிசார் அழைத்து சென்றனர்.

கர்ப்பமாக இருந்த அம்மானி தான்ஜிக்கு, திடீர் வயிற்று வலி ஏற்பட்டது.அவர், கோயமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கர்ப்பம் கலைந்தது. அங்கு, அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற இருவரும், சிறையில் அடைக்கப்பட்டனர்.