நாடு முழுவதும் சற்று முன்னர் வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்!

நாடு முழுவதும் சற்று முன்னர் வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்!

இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் 9ஆவது பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கை நாடு முழுவதும் சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.

இம் முறை பொதுத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்து 3 ஆயிரத்து 652 பேரும், சுயேட்சைக்குழுக்களில் இருந்து 3 ஆயிரத்து 800 பேருமாக மொத்தம் 7 ஆயிரத்து 452 பேர்  போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

160 தேர்தல் தொகுதிகளில் இருந்து இவர்களில் 196 பேர் வாக்களிப்புமூலமும், 29 பேர் தேசியப்பட்டியல் ஊடாகவும் தெரிவுசெய்யப்படுவார்கள். 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்தும் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

12 ஆயிரத்து 985 வாக்களிப்பு நிலையங்களும் 2 ஆயிரத்து 773 வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு கடமையில் பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர். 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார அதிகாரிகளும் இம்முறை தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாலை 5 மணிக்கு வாக்களிப்பு முடிவடைந்ததும் ‘சீல்’ வைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்குப்பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படும். மறுநாள் காலை அதாவது 6 ஆம் திகதி காலை 8 மணி முதல் வாக்கெண்ணும் பணி ஆரம்பமாகும்.

முதலாவது தேர்தல் முடிவை மாலை 4 மணிக்கும் இறுதி தேர்தலை முடிவை நள்ளிரவு 12 மணிக்குள்ளும் வழங்குவதற்கு தேர்தல் ஆணைக்குழு உத்தேசித்துள்ளது. விருப்பு வாக்கு முடிவுகள் 7 ஆம் திகதி நள்ளிரவுக்குள் வெளியாகும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் அறிவித்துள்ளார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் பிரதான இரு கட்சிகளாக கருதப்பட்ட ஐக்கிய தேசியக்கட்சி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியன இம்முறை மூன்றாம் நிலை கட்சிகளாகவே களத்துக்கு வந்துள்ளன. இதில் ஐக்கிய தேசியக்கட்சி 22 தேர்தல் மாவட்டங்களிலும் தனித்து போட்டியிட்டாலும் சுதந்திரக்கட்சி 3 மாவட்டங்களில் மட்டுமே போட்டியிடுகின்றது. ஏனைய மாவட்டங்களில் மொட்டு கட்சியுடன் இணைந்து பயணிக்கின்றது.

முதல்முறையாக பொதுத்தேர்தலை சந்திக்கும் கட்சிகளான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு அணிகளுக்கிடையில்தான் அதிகாரத்துக்கான போட்டி நிலவுகின்றது என அரசியல் அவதானிகளால் சுட்டிக்காட்டப்படுகின்றது. வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான போட்டிக்கட்சியாக கருதப்படுகின்றது.