லெபனான்-பெய்ரூட்டில் இருக்கும் வெடிமருந்து கிடங்கு வெடித்து சிதறியதில் 60 பேர் பலி..! 

லெபனான்-பெய்ரூட்டில் இருக்கும் வெடிமருந்து கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம்..

லெபனான் நாட்டில் ஆறு ஆண்டுகளாக பாதுகாப்பின்றி சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து கிடங்கு வெடித்துச் சிதறியதில் தலைநகர் பெய்ரூட்டில் பாரிய அழிவு ஏற்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெய்ரூட்டில் இருக்கும் வெடிமருந்து கிடங்கு வெடித்துச் சிதறியதில் குறைந்தது 60 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 3,000 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நகரின் துறைமுகப் பகுதியில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன, மட்டுமின்றி இரண்டாவது குண்டுவெடிப்பு குறித்தும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெடிப்பு தொடர்பில் வெளியான காணொளி காட்சிகளில், நகரமெங்கும் கரும்புகை சூழ்ந்துள்ளதுடன், பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதற்கட்ட விசாரணையில், ஆறு ஆண்டுகளாக ஒரு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிபொருட்களே இந்த குண்டுவெடிப்புக்கு காரணம் என அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பற்ற முறையில் சேமிக்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஜனாதிபதி மைக்கேல் அவுன் ட்வீட் செய்துள்ளார்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கான சரியான காரணம் என்ன என்பதை கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, மருத்துவமனைகள் அனைத்தும் வெடிவிபத்தில் சிக்கியவர்களால் ஸ்தம்பிக்கும் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி பல கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த குண்டுவெடிப்பானது 240 கி.மீ (150 மைல்) தொலைவில் அமைந்துள்ள கிழக்கு மத்தியதரைக் கடலில் உள்ள சைப்ரஸ் தீவில் கேட்டுள்ளது.

இந்த வெடிவிபத்தானது தற்செயலான ஒரு விபத்தாக இருக்கலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், லெபனானின் தேசிய செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தகவலில், குண்டுவெடிப்புக்கு முன்னர் குறித்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து மீட்புக்குழுவினர் மற்றும் மருத்துவ உதவிக்குழுவினர் சம்பவப்பகுதியில் வரவழைக்கப்பட்டு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப், அரசாங்கம் அனைத்து உதவி மற்றும் ஆதரவை வழங்க தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் Jean-Yves Le Drian கூறுகையில், பிரான்ஸ் அரசாங்கம் உதவி வழங்க தயாராக உள்ளது என அறிவித்துள்ளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஹரிரி கார் குண்டு மூலம் கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு சந்தேக நபர்களின் விசாரணையில் ஐ.நா தீர்ப்பாயம் தனது தீர்ப்பை வெளியிட உள்ளது.

இந்த நான்கு பேரும் ஈரானிய ஆதரவுடைய ஹெஸ்பொல்லா குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்,

மட்டுமின்றி முன்னாள் பிரதமர் ஹரிரியின் மரணத்தில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என அவர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

மேலும் அவர்கள் ஆஜராகாமலே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.