இலங்கை பாடசாலை மாணவர்களுக்காக  கல்வியமைச்சினால் தயாரிக்கப்பட்ட இறுவட்டு!

பாடசாலை மாணவர்களுக்காக  தயாரிக்கப்பட்ட இறுவட்டு வெளியீடு..!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பது தொடர்பில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் சமூகத்திற்கு அறிவுறுத்தும் வகையில் சுகாதார வழிகாட்டல் ஆலோசனைகளடங்கிய இறுவட்டு ஒன்றை கல்வி அமைச்சு நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது.

கல்வியமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த இறுவட்டு வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை தடுப்பதற்கு ஆலோசனை வழிகாட்டலாக சுகாதார வழிமுறைகளை உள்ளடக்கிய இந்த இறுவட்டு நாடு முழுவதிலுமுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் கல்வி அமைச்சினால் விசேட சுற்று நிருபம் மற்றும் வழிகாட்டல்கள் அனைத்து பாடசாலைகளுக்கும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதுடன்,நேற்றைய தினம் மேற்படி இறுவட்டு பாடசாலைகளுக்குப் பகிர்ந்தளிப்பதற்காக கல்வி அமைச்சின் செயலாளரிடம் கொடுக்கப்பட்டது.

இதற்கமைய கல்வியமைச்சில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் அனுசரணை மற்றும் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்டுள்ள இறுவட்டு பாடசாலை ஆரம்பமாகும் தினத்தில் சகல பாடசாலைகளுக்கும் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் பொதுத்தேர்தலினை முன்னிட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும்-07 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.அதாவது இன்று, நாளை, நாளை மறுதினம் மற்றும் 7ஆம் திகதிகளில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள், கடந்த 27ஆம் திகதி தரம் 11, 12 மற்றும் 13 ஆம் தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த நிலையில் பொதுத்தேர்தலை முன்னிட்டு மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.