இலங்கையின் புதிய அமைச்சர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

எதிர்வரும் 12ஆம் திகதி வழங்கப்படவுள்ள அமைச்சு பதவிகள் ..

எதிர்வரும் 12ஆம் திகதி கண்டியில் வைத்து புதிய அமைச்சரவை பதவி பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவையை 26 பேருடன் மட்டுப்படுத்தி இராஜாங்க, பிரதி மற்றும் திட்டம் அமைச்சர்களும் குறித்த தினத்தில் பதவி பிரமாணம் செய்யவுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அமைச்சரவை பதவி ஒன்று கிடைக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
புத்த சசனா மற்றும் கலாச்சார விவகார அமைச்சு பதவியை ஜனாதிபதி பெற்றுக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி மற்றும் வீட்டுவசதி மற்றும் கட்டுமான அமைச்சராக பதவியேற்க உள்ளார். சாமல் ராஜபக்ஷ நீர்ப்பாசன அமைச்சராக பதவியேற்கவுள்ளார் என தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

நாமல் ராஜபக்ஷ விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்க உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

பேராசிரியர் ஜீ.எல் பீரிஸிற்கு கல்வி அமைச்சர் பதவியும், தினேஷ் குணவர்தனவுக்கு வெளிவிவகார அமைச்சர் பதவியும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சராக பவித்ரா வன்னிஆராச்சியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு விவசாய துறை அமைச்சர் பதவியும், பிரசன்ன குணவர்தனவுக்கு சுற்றுலா மற்றும் சிவில் விமான சேவை அமைச்சு பதவியும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஊடக துறை அமைச்சு பதவி கெஹலிய ரம்புக்வெல்லவுக்கும், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரிக்கு நீதி அமைச்சர் பதவியும், பேராசரியர் நாலக கொடஹேவா, பேராசிரியர் சரத் வீரசேகர மற்றும் ஜீவன் தொண்டமானுக்கு அமைச்சரவை அமைச்சர் பதவியும் வழங்கப்படவுள்ளதாக கட்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.