யாழில் கொரோனா சந்தேகத்தின் பேரில் சிகிச்சை பெற்று வந்த நபர் மரணம்!

யாழில் கொரோனா என சந்தேகிக்கப்பட்ட நபர் மரணம்!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று என சந்தேகிக்கப்படும் நபர் நேற்று உயிரிழந்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறையை சேர்ந்த கணபதிப்பிள்ளை சிவகுரு என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் ஈரல் நோய்த் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் விடத்தல் பளை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பாக உறுதி செய்யப்பட்டது.

இதன் காரணமாக அவர் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற வைத்தியசாலையின் விடுதியில் சிகிச்சை பெற்றவர்கள், மருத்துவ உத்தியோகத்தர்கள் 70 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அவ்வாறு அறிவுறுத்தப்பட்டிருந்தவர்களில் கணபதிப்பிள்ளை சிவகுருவும் உள்ளார்.

கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய மறுநாளே சிவகுரு யாழ். போதனா வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சுய தனிமைப்படுத்தலுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தார். பின்னர் குறித்த நபருக்கு கொரோனாத் தொற்ற இல்லை என்று மருத்துவ அறிக்கை வெளியான நிலையில் அனைவரும் விடுவிக்கப்பட்ட நிலையில் சிவகுருவும் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

அவருக்கு கொரோனாத் தொற்றுத் தொடர்பிலான பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவருக்கு தொற்று கண்டறியப்படவில்லை என சுகாதார உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.